அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா சிகிச்சை; தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்; புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

அ.முன்னடியான்

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜூன் 16) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மே 15 முதல் ஜூன் 15 வரை கரோனா தொற்று 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 50 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. மருத்துவ வல்லுநர்கள் கரோனா தொற்று தாக்கம் நவம்பர், டிசம்பர் வரை இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நீடித்தால் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும். இது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்துவேன்.

மேலும், மருத்துவர்கள், செவிலியர்களும் தேவைப்படுவர். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் நாள் ஒன்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடாகா போன்ற அருகாமை மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் புதுச்சேரியிலும் கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து கொள்வது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். புதுச்சேரியில் 10 முதல் 15 சதவீத மக்கள் இதைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

குறிப்பாக, வெளி மாநிலங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் முதல் முறை ரூ.500 அபரதாம் வசூலிக்கின்றனர். இரண்டாவது முறை ரூ.1,000 அபராதம் வசூலிக்கின்றனர். அதேபோல், அபராதம் விதிப்பதை புதுச்சேரியிலும் கடுமையாக்க வேண்டும்.

புதுச்சேரி மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. ஆந்திர மக்களுக்கு அம்மாநில முதல்வர் பல்வேறு வகைகளில் நிவாரணங்களை வழங்கி வருகின்றார். இதனால் ஏனாமைச் சுற்றியுள்ள ஆந்திரப்பகுதி மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் உள்ளது. புதுச்சேரியில் 30 சதவீதம் வரை வியாபாரம் குறைந்துவிட்டது. ஆனால், வாடகை, ஊதியம், வங்கி மாதாந்திரத் தொகை ஆகியவை அப்படியேதான் தர வேண்டியுள்ளது.

அதேபோல், ஏனாமில் இதுவரை மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆந்திராவுக்கு மது அருந்தச் செல்கின்றனர். இதனால் ஏனாமைச் சேர்ந்த நிறைய பேர் மீது ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்''.

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT