கண்டன ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர். 
தமிழகம்

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், பணியாளர்களை தமிழக அரசு நியமிப்பது தவறானது; கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

க.ரமேஷ்

தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், பணியாளர்களை நியமிப்பது தவறானது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரோனா வைரஸ் முடக்கத்தால் வேலை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஜூன் 16) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவை மட்டுமல்லாமல் காவல்துறை அதிகாரிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு, முறையாக கடைப்பிடிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இந்த பரவலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

ஆனால், அரசு தட்டுத்தடுமாறி குழப்பங்களால் ஊரடங்கை வாபஸ் பெற்றுவிட்டு, இப்போது வேறு வழியில்லாமல் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. இப்போதுகூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வது ஊரடங்கு அறிவித்தது அவசியம் என்று சொன்னால் கூட, இதுமட்டுமே நோய் பரவலை தடுத்துவிட முடியாது. எனவே ஒருங்கிணைந்த திட்டம் என்ற முறையில் தமிழக அரசு, நோயை கட்டுப்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்த நான்கு மாவட்டங்களில் பரவலாக சோதனைகளை அதிகரிக்க வேண்டும் .நோய் தொற்று உள்ளவர்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அனைவரையும் பரிசோதனை செய்து யாருக்கு நோய் தொற்று உள்ளதோ அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜூன், ஜூலை மாதம் நோய் தொற்று மிக உச்சத்தை எட்டும். இந்த காலக்கட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கைகளை அரசு தயார் செய்து வைக்க வேண்டும்.

அதேபோல், போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இல்லை. இந்த நேரத்தில் கூட தேவையான அளவில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்கும் முயற்சி என்பது தவறானது. இதனால் அரசின் தேவையை ஈடு செய்ய முடியாது.

அதுமட்டுமல்ல பெருத்த ஊழல் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில், 'ஜென்டில்மேன் ஏஜென்சி' என்ற நிறுவனம் மூலம் மருத்துவர்கள் ,செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் மிகப்பெரிய ஊழல் நடக்க தமிழக அரசு வழிவகுத்துள்ளது. இதனால் அரசின் தேவைகள் பூர்த்தியடையாது.

சுமூகமான நிலை திரும்பாத நிலையில், மத்திய அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். பொதுமக்கள் கையில் பணம் இருந்தால் மட்டுமே பொருட்களை வாங்குவார்கள்.

தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அனைத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான செலவை தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் காப்பீட்டு தொகை மூலமாகவோ, அரசு நிதி மூலமாகவோ நேரடியாக வழங்க வேண்டும். இதை செயல்படுத்தினால் தான் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். நோய் பரவலை தடுக்க முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT