புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர், முகக்கவசம் தயாரிக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உட்பட புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 16) ஒரே நாளில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 216 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 113 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 99 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் இன்று (செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் இன்று 14 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 11 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் காரைக்காலில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஜிப்மர் மருத்துவர் ஒருவர், முகக்கவசம் தயாரிக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உள்ளிட்டோர் அடங்குவர். இதில் 12 பேர் ஏற்கெனவே தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். 2 பேருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 216 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 113 ஆகவும் உள்ளது. தற்போது ஜிப்மரில் 4 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆகவே குணமடைந்தோர் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 ஆயிரம் 486 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரத்து 231 பேருக்கு 'நெகட்டிவ்' வந்துள்ளது. 41 பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.
தவளக்குப்பம், பிள்ளையார்குப்பம், நெல்லித்தோப்பு, முத்திரையர்பாளையம், கூனிச்சம்பட்டு, திருக்கனூர், வைத்திருக்குப்பம், வாழைக்குளம் உள்ளிட்ட 12 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன. 3 கட்டுப்பாட்டு மண்டலங்கள் விலக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையத்தில் முகக்கவசம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 47 பேர் வரை பணிபுரிகின்றனர். அதில் ஏற்கெனவே 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 5 பேர் என இதுவரை 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.