மதுரையில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என பாஜக மாநில செயலர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா கரோனா பரவலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை உலக நாடுகளை விட சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது. சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை பாஜக ஆதரிக்கிறது. மக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் மின் சீர்திருத்த சட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய சொல்லவில்லை. இந்த சட்டத்தில் இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் அனைவருக்கும் இலவச மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். மின் சீர்த்திருத்த சட்டத்தில் விவசாயிகள் பலனடைவர்.
மருத்துவப் படிப்புகளில் மத்திய அரசின் இடங்களுக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறை 2006-ல் ஆண்டிலிருந்து உள்ளது. இதில் திமுக, திக அரசியல் செய்கிறது.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்கும். கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் அடிப்படையில் தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மாநில அரசுகளின் வரியால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகமாக உள்ளது.
கரோனா காலத்துக்கு பிறகு இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். மக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்குவதில் பாஜக முதலிடத்தில் உள்ளது. பாஜகவுக்கு பிறகு தான் திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்க ஆரம்பித்தனர்.
மதுரையில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் வைத்துள்ள கோரிக்கை நியாயமானது. மதுரையில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும், தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், துணைத் தலைவர் எஸ்.கே.ஹரிகரன், மாவட்ட பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.