நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது அரசின் 10 சதவீத உள் ஒதுக்கீடு முடிவு. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத ஏழை மாணவர்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு எப்படி உதவும். இதுவும் ஒரு வகையில் நீட் தேர்வை அங்கீகரிக்கும் ஒன்றே என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10% உள் ஒதுக்கீடு அவசரச் சட்டம். இது, “நீட்”டை ஏற்கிறது, அதோடு, கரோனாவால் மற்ற தேர்வுகளை விட்டு, இதை மட்டும் நடத்துவது, தமிழகக் கல்லூரிகளில் வட மாநில மாணவர்களை திணிக்கும் மத்திய அரசின் ஏற்பாடே? நீட்டில் தேர்ச்சி பெறாமல் ஏழை மாணவர்களுக்கு எப்படி உதவும் இந்த உள் ஒதுக்கீடு? அவசரச் சட்டம் நீட்டை ஒழிப்பதற்கானதாக இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர் படிப்புக்கான அரசு கல்வி நிலையங்கள் அதிகமாக உள்ளன. சென்னையில் மட்டுமல்ல, மாவட்டத்துக்கொரு அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மிகுதியாக உள்ளனர். அதேசமயம் வடநாட்டில் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத மாநிலங்களும் உள்ளன.
12 கோடிக்கு மேல் மக்கள்தொகை மிகுந்த, உள்ளதிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் குறைந்த அளவு அரசு மருத்துவக் கல்லூரிதான் உள்ளது என்றால், பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் அரசு மருத்துவக் கல்லூரியே கிடையாது.
இந்த நிலையில்தான் மோடி பிரதமர் ஆனதும் நீட் நுழைவுத் தேர்வைக் கொண்டுவருகிறார். மாணவர்களிடம் பெருந்தொகை கறக்கும், வினாத்தாளையும் அளிக்கும் கோச்சிங் சென்டர்கள் மூலம் ஊழல், முறைகேடுகள், குளறுபடிகளால் வடநாட்டு பணக்கார மாணவர்களை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நுழைய வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வை எதிர்த்து மாணவிகள் பலர் உயிர் நீத்ததோடு, போராட்டமும் தொடர்கிறது. நீட்டை விலக்க ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியும் கூட, 20 மாதங்களாக அதை மக்களுக்குச் சொல்லாமல் மறைத்தது எடப்படி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.
இந்தக் குட்டு அம்பலமான பிறகாவது நீட்டை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியதா என்றால் இல்லவே இல்லை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீட்டுக்கு எதிரான போராட்டங்களை அடியோடு நிராகரித்ததுடன், நீட்டை நிரந்தரமாக ஏற்றுக்கொண்டது அதிமுக அரசு என்பதுதான்.
ஆனால் மக்களை ஏமாற்ற, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வாசித்தார் எடப்பாடி.
இதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இந்தக் குழுவில் உயர்கல்வித் துறைச் செயலர், பள்ளிக் கல்வித் துறைச் செயலர், சட்டத் துறைச் செயலர், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள். குழுவின் அறிக்கை கடந்த 8-ம் தேதி முதல்வரிடம் வழங்கப்பட்டது.
அந்த அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் 83 விழுக்காடு மாணவர்கள் தினக்கூலி தொழிலாளர்களின் குழந்தைகளாக இருக்கிறார்கள்; எனவே பொருளியல் நிலை, வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்று, 10% உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழக அமைச்சரவை.
நீட் தேர்வுக்குப் பின்னர், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வி ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் இருந்து, மருத்துவப் படிப்பில் ஒன்றிரண்டு மாணவர்களே சேர்க்கப்பட்டனர். இந்த உள் ஒதுக்கீடு தொடர்பாக, ஊடகங்களுக்கு அதிமுக அரசு கொடுத்த செய்திக் குறிப்பில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10% உள் ஒதுக்கீடு என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது; பல்வேறு தரப்பிலும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது” என்ற வாசகத்தைச் சேர்த்துள்ளது. இது தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொள்வதாகும்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10% உள் ஒதுக்கீடு அவசரச் சட்டம். இது, “நீட்”டை ஏற்பதோடு, கரோனாவால் மற்ற தேர்வுகளை விட்டு, இதை மட்டும் நடத்துவது, தமிழகக் கல்லூரிகளில் வட மாநிலத்தவரைத் திணிக்கும் மத்திய அரசின் ஏற்பாடே?
நீட்டில் தேர்ச்சி பெறாமல் ஏழை மாணவர்களுக்கு எப்படி உதவும் இந்த மோசடி உள் ஒதுக்கீடு? அவசரச் சட்டம் நீட்டை ஒழிப்பதற்கானதாக இருக்க வேண்டும்”.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.