கரோனாவால் மூன்று மாதங்களாக அழகு நிலையம், டிராவல்ஸ் தொழில்கள் முடங்கியதால் வாழ்வாதாரத்துக்காக புதுச்சேரி தம்பதியர் தன்னம்பிக்கையுடன் பிரியாணி கடை தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி காட்டேரிகுப்பம் கிராமம் திரவுபதி அம்மன் கோயில் வீதியில் வசிப்பவர் ஜெயகுமார். இவர் டிராவஸ் உரிமையாளர். இவரது மனைவி கலா. அழகுக் கலை நிபுணரான இவர் வீட்டிலேயே அழகு நிலையம் வைத்து கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 90 நாட்களாக அழகு நிலையத்தை நடத்த முடியாமல் இருந்தார். அத்துடன் அவரது கணவரின் டிராவல்ஸ் தொழிலும் முடங்கியது. டிராவல்ஸ் தொழிலில் வருமானம் இல்லாததால் கஷ்டப்பட்டு வந்தனர்.
3 மாதங்கள் தாண்டியும் கரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. தங்களது தொழில் மீண்டும் தொடங்குவதற்கான காலமும் தெரியவில்லை. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் மாற்றம் ஏற்படவில்லை. இச்சூழலில் வாழ்வாதாரத்துக்காக இருவரும் இணைந்து பிரியாணி கடையைத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தம்பதி ஜெயகுமார்-கலா கூறுகையில், "அழகு நிலையம், கரோனாவால் மூடப்பட்டது. திருமண நிகழ்வுகளும் நடக்கவில்லை. டிராவல்ஸ் முற்றிலும் முடங்கியிருந்தது. வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என யோசித்தோம்.
இப்பகுதிக்கு என்ன தேவை என யோசித்து பிரியாணி கடையைத் திறந்தோம். தற்போது காலை 11 முதல் பகல் 2 வரை பிரியாணி வியாபாரம் செய்கிறோம். ஏசியில்தான் அழகு நிலையம் இயங்கும். அதேபோல், டிராவல்ஸ் தொழிலிலும் வாகனங்களில் ஏசியை இயக்க வேண்டும்.
தற்போது அதற்கு மாற்றாக பிரியாணி தயாரிக்கிறோம். சிலர் நாம் ஈடுபட்டுள்ள துறையை மாற்றி எப்படி புதிதாக இயங்குவது என யோசிப்பார்கள். வாழ்வாதாரத்துக்கு மாற்றுத் துறைக்கு மாறினாலும் உழைத்தால் நிச்சயம் மாற்றம் வரும். கஷ்டம் வந்தால் முடங்காமல் மாற்றி யோசித்தால் நிச்சயம் வாழ முடியும்" என்கிறார்கள் தன்னம்பிக்கையுடன்.