ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று சபாநாயகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவைத் தலைவரிடம் தனக்கு கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அதிருப்தியாளர்கள் பட்டியலில் இருந்த இப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உட்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனையடுத்து கட்சிக் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததாகவும் இதனையடுத்து கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிடக் கோரி கடந்த ஏப்ரல் 2018-ல் திமுக தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து திமுக சார்பில் சக்கரபாணி, வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரே முடிவெடுப்பார் என்று வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனையடுத்து மீண்டும் திமுக தரப்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் 3 மாத காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். இது அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே 11 பேர் தகுதி நீக்கம் தொடர்பான இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திருப்பம் ஏற்படுத்தும் வகையில் சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர், ''நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கு மட்டுமே கொறடாவின் உத்தரவு அனுப்பப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு அனுப்பப்படவில்லை. அதிமுக பேரவைக் கட்சித் தலைவராகத் தன்னை தேர்வு செய்த 122 உறுப்பினர்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிராகச் செயல்படவில்லை. 11 எம்எல்ஏக்கள் தனியாகச் செயல்பட்டிருந்தாலும் இப்போது ஒரு அணியாகச் செயல்படுகிறோம். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. எனவே இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை'' என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தானும் ஓபிஎஸ்ஸும் இணைந்து தலைமையேற்று நடத்தும் அதிமுக உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையமே அங்கீகரித்துவிட்டது என்று கூறிய பழனிசாமி, மனுதாரர்கள் அதிமுகவில் இல்லாதவர்கள். எனவே அந்த மனுக்கள் தள்ளுபடி செய்ய உரியன என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து 11 எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்த 6 பேரும் 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவைச் செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.