ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை ஓய்வூதியத்தினரின் காப்பீடுத் திட்டத்தில் சேர்க்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:
''தமிழ்நாட்டில் அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். 58 வயதில் ஓய்வுபெறும் இவர்களில் பெரும்பாலானோர் தற்போது 60 வயதைக் கடந்து வாழ்கிறார்கள். இவர்கள் எந்த நேரத்தில் கரோனா தொற்றுக்கு உட்படுகிற நிலை ஏற்படும் என்கிற அச்சத்துடன் பீதியில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களது ஓய்வூதியத்திலிருந்து ரூபாய் 350 மாதம் தோறும் மருத்துவக் காப்பீடுக்காகப் பிடித்தம் செய்யப்படுகிறது. நான்கு ஆண்டு காலத்திற்கு இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் ரூபாய் 4 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுகிற தகுதி உள்ளது. தற்போது உயிர்க்கொல்லி நோயான 'கரோனா' தொற்று சிகிச்சை இவர்களது காப்பீடுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
இதனால் கரோனா தொற்று ஏற்பட்டால் இவர்களது மருத்துவச் செலவு முழுவதும் இவர்களே ஏற்கவேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசின் இத்தகைய வேறுபாடு என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் எத்தகைய அணுகுமுறை இருக்கிறதோ அதே அணுகுமுறை அரசுப் பணியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இருக்கவேண்டும்.
எனவே, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை ஓய்வூதியத்தினரின் காப்பீடுத் திட்டத்தில் சேர்க்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசில் பல ஆண்டுகள் பணியாற்றி 60 ஆண்டுகள் கடந்த இவர்களது மருத்துவச் செலவை ஏற்பது தமிழக அரசின் கடமையாகும்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.