கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் என்பது 1993 முதல் நிரந்தரமாக அமைக்கப்பட்ட ஆணையம் ஆகும். அந்த ஆணையத்திற்குத் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மொத்தம் 9 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதில் தலைவராக, பிற்படுத்தப்பட்டோர் நலனில் அனுபவம் வாய்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார். அரசு அதிகாரிகள் இருவர், அதில் பிற்படுத்தப்பட்டோர் துறை அதிகாரிகள் என்கிற தன்மை காரணமாக உறுப்பினர்களாக இருப்பார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், உறுப்பினர்கள் நியமனமே செய்யப்படாமல், அந்தக் கோப்புகள் அப்படியே இருப்பதாக அறியப்படுகிறது.
ஏறத்தாழ 18 மாதங்களாக செயல்படாமல் இருக்கிறது!
மிக முக்கியமான வழக்குகளைத் தாக்கல் செய்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடிடும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு தேக்க நிலை, அதுவும் ஏறத்தாழ 18 மாதங்களாக செயல்படாமலே இருக்கிறது என்ற தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.
நல்ல சட்ட அனுபவம், நீதி பரிபாலன அனுபவம், சட்ட ஞானம், சமூக நீதியில் ஆழ்ந்த நம்பிக்கையும், செயல்திறனும் உடைய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ள நிலையில், அரசு தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியமல்லவா! இதற்கு என்ன தயக்கம்?
சமூக நீதித் துறையில் இப்படி ஒரு தாமதம் - கிடப்பா?
மேலும், காலதாமதம் செய்வது தவறு; சமூக நீதித் துறையில் இப்படி ஒரு தாமதம் - கிடப்பு ஏற்பட்டது மிகவும் வேதனைக்குரியது. உடனடியாக செயல்பட வேண்டியது முக்கியம்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.