டெல்டா மாவட்டங்களின் பாசனத் துக்காக மேட்டூர் அணையில் கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், நேற்று பிற்பகல் முக்கொம்பு மேலணையை வந்து சேர்ந்தது.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஆனால், இதில் விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரே கரூர் மாவட்டம் மாயனூர் தடுப் பணைக்கு வந்து சேருகிறது. மாயனூரில் இருந்து அப்படியே திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீர் முக்கொம்பு மேலணைக்கு நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் வந்து சேர்ந்தது. இந்த தண்ணீர் முக்கொம்பில் தேக்கப்படாமல் காவிரியில் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
முன்னதாக, பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர்கள் புகழேந்தி, ராஜரத்தினம் உள்ளிட்டோர் வழிபாடு நடத்தினர்.
இதேபோல விவசாய சங்க நிர்வாகிகள் புலியூர் நாகராஜன், தீட்சிதர் பாலு, சிவ.சூரியன், ஹேம நாதன் உள்ளிட்டோர் விதைநெல், மலர்களைத் தூவி காவிரி நீரை வரவேற்றனர்.
முக்கொம்பில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீர் இன்று(ஜூன் 16) காலை கல்லணையைச் சென்றடையும். அதைத்தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.