கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவம னைக்கு நேற்று அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
உடனடியாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் துக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள உளுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர், கடந்த 3-ம் தேதி சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்துள்ளார்.
சுகாதாரத் துறையினர் அவரைப் பிடித்து மருத்துவ பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், அவர் சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். உரிய அனுமதியின்றி ஊருக்குள் வந்து கரோனா தொற்றை பிறருக்கு பரப்பும் விதமாக செயல்பட்டதாக அவர் மீது உளுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், மருதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.