நோயில் வெற்றி என்ன, தோல்வி என்ன? இது உலக அளவில் பரவியுள்ள நோய். உலகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையை வைத்து அரசியலாக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
“உலக சுகாதார நிறுவனம் பாராட்டத்தக்க வகையில் நாம் செயல்படுகிறோம். கரோனா வைரஸ் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் தமிழக அரசு தனது சிறப்பான நடவடிக்கை மூலம் கண்ணுக்குத் தெரியாத கிருமியை எதிர்த்துப் போராடி வருகிறது.
இருப்பினும் நோயைக் கட்டுப்படுத்த அதிகமான அளவில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 25,344 பேரைக் குணப்படுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் அரசு திணறுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்வது முற்றிலும் தவறான வாதமாகும்.
இந்த நடவடிக்கையின் நோக்கம் என்ன? முதல்வர் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என முயல்கிறார். அதற்கு என்ன செய்யவேண்டும். அதிக அளவில் சோதனைகள் எடுத்து நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். 18,403 சோதனைகளை இன்று மட்டுமே எடுத்துள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவில் சோதனை எடுத்துள்ள மாநிலம் தமிழகம்தான். எண்ணிக்கையை வைத்து அரசியலாக்க வேண்டாம். அரசு வெளிப்படையாக உள்ளது. தினமும் வேண்டிய தகவல்களை அளிக்கிறோம்.
சென்னையில் இன்று பார்த்தால் அதிகப்படியான குழுக்களை அமைத்து, அமைச்சர்களைப் பொறுப்பாக அமைத்துப் பணி நடக்கிறது. நோய் வரும் எனத் தெரிந்தும் களப்பணியாளர்கள், ஏன் அமைச்சர்களே பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் பக்கம் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையைத் தருகிறோம்.
5 முறை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி அதன் வழிகாட்டுதல் படி 1,85,000 சோதனைகள் சென்னையில் எடுக்கப்படுள்ளன. 87 லட்சம் மக்கள் நெருக்கம் மிகுந்த, நெரிசலான தெருக்கள் மிகுந்த நகரம். 1,85,000 ஆய்வுகள் செய்யப்பட்டதால்தான் அதிக தொற்று எண்ணிக்கை காட்டுகிறது. அதனால் சிகிச்சை அளித்து மரண விகிதத்தைக் குறைக்க முடிந்துள்ளது.
சென்னையில் அதிக அளவில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. 17,500 படுக்கை வசதிகள், அரசு மருத்துவமனையில் 5000 படுக்கை வசதிகள், தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே எதிர்மறையான கருத்துக்கு நேரமல்ல. இது அரசியல் செய்யும் களமுமல்ல. 162 தனியார் மருத்துவமனைகளில் 7042 படுக்கை வசதிகள் காலியாக உள்ளன. வென்டிலேட்டர், ஆக்சிஜன் உள்ளிட்ட எல்லா எண்ணிக்கையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து முதல்வர் பேசி அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். மருத்துவர்களின் உள்ளார்ந்த ஈடுபாடு அபரிதமானது. எத்தனையோ மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்களுக்குத் தொற்று வருகிறது. ரிஸ்க் இருக்கிறது. தெரிந்துதான் அவர்கள் களத்தில் நின்று போராடுகிறார்கள்.
நோயில் வெற்றி என்ன, தோல்வி என்ன? இது ஒரு உலக அளவில் பரவியுள்ள நோய். உலகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கிறது. சிகிச்சையில் போராடும்போது இதில் வெற்றி என்ன தோல்வி என்ன? விலை உயர்ந்த நோய்த்தடுப்பு மருந்துகளை தருவித்துக் கொடுத்து வருகிறோம். பல்வேறு ஆராய்ச்சிகள், பிளாஸ்மா சிகிச்சையைச் சிறப்பாகச் செய்து வருகிறோம். மற்றொரு புறம் கபசுரக் குடிநீர் என என்னென்ன வழிகள் இருக்கிறதோ அனைத்தையும் செய்து வருகிறோம்.
அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எவ்விதமான எதிர்மறை கருத்துகளுக்கும் இடமில்லை. ஸ்டாலின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன். இன்றைக்கு நடமாடும் மருந்தகங்கள் மூலம் மருத்துவர்கள் மக்களைத் தேடிச்சென்று கண்டுபிடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
கரோனாவுக்காக தனி கட்டுப்பாட்டு அறை, தனி ஆம்புலன்ஸ், மனநல மருத்துவர் மூலம் குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம். நீண்டகால நோயுள்ளவர்களைப் பாதுகாக்கும் முயற்சியை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
பொதுமக்கள் ஒத்துழைப்பே முழுமையான தீர்வு, பொதுமக்களை வணங்கிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் வெளியில் செல்லும்போது தயவுசெய்து முகக்ககவசம் அணிந்து செல்லுங்கள். யாருக்காக சொல்கிறோம், உங்களுக்காக, உங்கள் குடும்பத்தார் நலனுக்காக. உங்கள் மூலம சமுதாயத்தில் பரவல் வந்துவிடக்கூடாது என்கிற அக்கறையினால்தான் சொல்கிறோம். ஆகவே முகக்கவசத்தைக் கட்டாயம் அணியுங்கள்”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்,