தமிழகம்

குழந்தைகளுக்கு பால் வாங்கிக் கொடுக்க காசு இல்லை: கரோனா துயரத்தை விவரிக்கும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் 4,500 தனியார் பஸ்கள், 3,000 மினி பஸ்கள், 3,500 ஆம்னி பஸ்கள், 22,000 அரசுப்பஸ்கள் இயங்குகின்றன.

தற்போது மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கினாலும், அரசு பஸ்களும், தனியார் ரூட் பஸ்களும் மட்டுமே இயக்கப்படுகின்றன.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையும், இந்தியாவின் பிற மாநில நகரங்களுக்கும் நெடுந்தூர பயணங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் தற்போது வரை ஓடவில்லை.

தற்போது பஸ்களை இயக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க எங்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவுமாறும் இன்று மதுரை ஆட்சியர் டிஜி.வினயை சந்தித்து ஆம்னி பஸ் டிரைவர்கள் தமிழ்நாடு பஸ் டிரைவர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன், செயலாளர் முத்துவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் முறையிட்டனர்.

இதுகுறித்து ஆம்னி பஸ் டிரைவர்கள் கூறுகையில், ‘‘மதுரையில் மட்டும் 900 ஆம்னி பஸ் டிரைவர்கள் உள்ளோம். இதுபோல் தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருப்போம். ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு மாதச் சம்பளம் கிடையாது. வண்டிக்கு போய் வந்தால் மட்டுமே ஊதியம் கிடைக்கும்.

தற்போது பஸ்கள் ஓட்டம் இல்லாததால் கடந்த ஏப்ரல் முதலே எங்கள் குடும்பங்களின் வாழ்வாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ‘கரோனா’ ஊரடங்கால் நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் படும் சிரமங்களை சொல்ல முடியவில்லை. அரசு வழங்கும் ரேஷன் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்டவைகளை வைத்தும், கடன் வாங்கியும் சமாளித்து வருகிறோம்.

இன்னும் எத்தனை நாளுக்குதான் இப்படி வாழ்க்கையை ஓட்டுவது. பிள்ளைகள் ஆசையாக கேட்கும் எதையுமே வாங்கி கொடுக்க முடியவில்லை. வீட்டு வாடகை, கரண்ட் பில், பிற அன்றாட அத்தியாவசிய தேவைகளையும், மருத்துவ செலவையும் சமாளிக்க முடியவில்லை. இந்த ‘கரோனா’ ஊரடங்கில் நாள் படும் துயரத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

எத்தனையோ பேரிடர் காலங்களில் எங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் வாகனங்களை இயக்கி அரசுக்கும், பொதுமக்களுக்கும்

உதவியாக இருந்துள்ளோம். தற்போது இந்த ‘கரோனா’ ஊரடங்கால் நாங்கள் மிகப்பெரிய பேரிடர் நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் பாலுக்காகவும், மருத்துவ தேவைக்காகவும் அழும்போது நாம் உயிரோடு இருக்க வேண்டுமா? என்ற மனஅழுத்த நிலைக்கு சென்றுவிடுகிறோம்.

எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம், ’’ என்றனர்.

SCROLL FOR NEXT