மதுரை பை-பாஸ் ரோட்டில் காளவாசல் சந்திப்பில் வழக்கம்போல் நெரிசல் தொடர்வதால் இந்தப் பகுதியில் எந்தவித தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் ரூ.54 கோடியில் கட்டிய உயர்மட்ட மேம்பாலம் வீணாகியுள்ளது.
மதுரையில் பீக் அவர் மட்டுமில்லாது காலை, பகல், இரவிலும் மக்கள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்தால் சாலைகள் பரபரப்பாகவே காணப்படுவதாலே இந்நகரம் தூங்கா நகர் என்று பெயரெடுத்தது.
மதுரையை விட பின்தங்கிய நகரங்களில், அந்த நகரங்களின் போக்குவரத்து, மக்கள் தொகை பெருக்கத்திற்கு தகுந்தோர்போல் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. நகர்ப்பகுதியில் நெரிசலைக் குறைக்க முக்கிய சந்திப்புகளில் உயர் மட்ட மேம்பாலம், பறக்கும்பாலம் அமைக்கப்பட்டன.
ஆனால், மதுரையில் தற்போதுதான் மிக தாமதமாக பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. காளவாசல், கோரிப்பாளையம், சிம்மக்கல், நத்தம் சாலை போன்ற இடங்களில் உயர் மட்ட மேம்பாலம், பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், மிக அதிகமாக நெரிசல் மிகுந்த கோரிப்பாளையம், சிம்மக்கல் பகுதியில் தற்போது வரை பாலம் கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை. அறிவிப்போடு நிற்கின்றன.
நெரிசலே இல்லாத நத்தம் சாலையில் பறக்கும் பாலம் அமைக்கும் பணி இந்த ‘கரோனா’ ஊரடங்கிலும் ஜரூராக நடக்கிறது. இந்தப் பாலங்களும் தொலைநோக்குப் பார்வையில் தேவையான இடங்களில் அமைக்கப்படவில்லை.
மதுரையில் காளவாசல், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பஸ்நிலையம் போன்ற பகுதியில்தான் போக்குவரத்து நெரிசல் உச்சமாக இருக்கிறது.
இப்பகுதிகளைக் கடக்க பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. அதனால், நகரின் வளர்ச்சியே தடைப்படும் நிலை தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் செல்லும் காளவாசல் பை-பாஸ் சாலையில் மாநில நெடுஞ்சாலை சார்பில் ரூ. 54 கோடியில் அமைக்கப்பட்ட உயர் மட்ட நாற்கர மேம்பாலத்தை கடந்த வாரம் முதலமைச்சர் கே.பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
ஆனால், இந்த பாலம், தொலைநோக்கு பார்வையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தை தொடங்கும்போதே இதற்கு மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், உள்ளூர் அமைச்சர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் மக்கள் கருத்துகளை காதுகொடுத்து கேட்காமல் பாலத்தை கட்டி முடித்து தற்போது இந்த பாலம் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது.
ஆனால், காளவாசல் பகுதியில் முன்பிருந்த போக்குவரத்து நெரிசல்களும், பிரச்சனைகளும் அப்படியே இருக்கிறது. இச்சந்திப்பை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. மிக விசாலமாக 200 அடி அகலம் கொண்ட திண்டுக்கல் சாலையில் இருந்து பழங்கநத்தம் செல்லும் இந்த பைபாஸ் ரோட்டில் மதுரையின் மற்ற சாலைகளை போல் பெரியளவுக்கு போக்குவரத்து நெரிசலே இல்லை.
ஆனால் சிம்மக்கல், கரிமேடு, பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து புதுஜெயில் ரோடு வழியாக அரசரடி - தேனி ரோட்டிற்கு செல்லும் சாலையில்தான் மிக அதிகமாக நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சாலையில்தான் முதன் முதலில் மேம்பாலம் கட்ட 2015ம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது. கோரிப்பாளையம் சந்திப்பு உயர் மட்டம் மேம்பாலம் போல் என்ன காரணத்தாலோ அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, நெரிசலே இல்லாத விசாலமான பழங்காநத்தம் - திண்டுக்கல் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் வீணாக ரூ.54 கோடியில் பாலம் கட்டியுள்ளனர்.
தற்போதும் முன்போல் காளவாசல் சந்திப்பில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால் காளவாசல் பைபாஸ் ரோட்டில் கட்டிய மேம்பாலம் தேவையற்றது என்பது நிரூபணமாகியுள்ளது.
அரசரடி - தேனி சாலையை இணைக்கும் வகையில் பாலம் கட்டியிருந்தால் தற்போது மட்டுமில்லாது எதிர்காலத்திலும் பயனுள்ளதாக இருந்திருக்கும் மதுரை மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலாஜி கூறுகையில், ‘‘இந்த பாலத்தால் வெறும் 25 சதவீதம் மட்டுமே நெரிசல் மட்டுமே குறைந்துள்ளது.
பெரியார் பஸ்நிலையம் பகுதியில் இருந்து அலங்காநல்லூர், வாடிப்பட்டி, பாலமேடு செல்கிற வாகனங்கள், முன்போலவே பாலத்திற்கு கீழே செல்கின்றன. அதுபோல் அங்கியிருந்து பெரியார் பஸ்நிலையம் செல்லும் வாகனங்களுக்கும் இந்த பாலத்தால் பயனனில்லை.
கோச்சடையில் இருந்து எஸ்.எஸ்காலனி செல்லும் வாகனங்களுக்கும் பயனில்லை. ஆரப்பாளையம் பஸ்நிலையத்தில் இருந்து தேனி, குமுளி செல்லும் பஸ்களும் பாலத்திற்கு கீழே செல்கின்றன.
இந்த பாலம், பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் ஒரு மூலையில் இருந்து திண்டுக்கல் சாலையின் மற்றொரு மூலைக்கு செல்வோருக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. பழங்காநத்தம், எஸ்எஸ்.காலனி, பெரியார் பஸ்நிலையம் உள்ளிட்ட பழங்காநத்தம் சுற்றுவட்டார நகர்பகுதியில் இருந்து காளவாசல் பிக் பஜார், ஜெர்மான்ஸ் ஹோட்டல், சம்மட்டிப்புரம், தேனி ரோடு, மாப்பிளை விநாயகர் தியேட்டர் உள்ளிட்ட அப்பகுதி வர்த்தக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும், அங்குள்ள குடியிருப்பு சாலைகளுக்கும் செல்வோர் பாலத்தில் செல்ல மாட்டார்கள்.
இவர்கள் வழக்கம்போல் காளவாசல் சிக்னலில் நின்றுதான் செல்ல வேண்டும். அதனால், அரசரடி, பை-பாஸ் சாலையில் இருந்து பாலத்தின் அடியில் வருவோர், தேனி சாலையில் இருந்து வருவோர், திண்டுக்கல் சாலையில் இருந்து பாலத்திற்கு அடியில் வருவோரால் தற்போதும் இந்த காளவாசல் சந்திப்பு சாலையை கடந்து செல்ல முடியவில்லை.
அதனால், வழக்கம்போல் போக்குவரத்து போலீஸார் இந்த சந்திப்பில் பணியமர்த்தப்பட்டு நெரிசல் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இந்த பாலத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கிய ரூ.54 கோடி மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.