கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கும்பளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது சின்னகுத்தி என்ற மலைக்கிராமம். சுற்றிலும் காடுகள் நிறைந்த இந்த கிராமத்தில் மலைவாழ் மக்கள் படிப்பதற்காக 1முதல் 5-ம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 37 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த விஜிலா என்ற ஒரே ஒரு ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கரோனா தொற்றால் கடந்த 3 மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி ஆசிரியர் விஜிலா தலைமையிலான கிறிஸ்துவக் குழுவினர் சின்னகுட்டி கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளைப் பள்ளிக்குள் அழைத்து வந்து முட்டிபோட வைத்து அவர்களுக்கு ஜெபக்கூட்டம் நடத்தி, கிறிஸ்து பாடல்களைப் பாட வைப்பதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், ஜெபக் கூட்டங்களுக்கு வர மறுப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது போல் பெயரளவுக்கு மைதா, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிக் கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர்.
அவர்களுக்கு 5 பெண்கள், 2 ஆண்கள் ஜெபக்கூட்டத்தை நடத்துகின்றனர். மாஸ்க், சமூக இடைவெளி என எதையும் பின்பற்றாமல் ஜெபக்கூட்டம் நடத்தும் 6 நிமிடத்திற்கு மேலான வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கிடையே இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.
விசாரணையில் சின்னகுத்தி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் விஜிலா மற்றும் ஏனுசோனை அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வி ஆகியோர் வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வந்து மலைவாழ் மக்களை மத மாற்றம் செய்ய முயற்சித்தது தெரியவந்தது. ஆசிரியை விஜிலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர் செல்விக்கு மெமோ கொடுத்துள்ளார்.
ஊரடங்கைப் பயன்படுத்தி இதுபோன்று மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் கும்பல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்யவேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.