தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் 350-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில்மட்டும் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் மற்றும்தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் போலீஸார் அனைவரும் கரோனா தொற்று , மருத்துவ பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
668 ஆக உயர்வு
இதற்கிடையே சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற காவல் சரக உதவி ஆணையர் ஒருவருக்கும், ஐஸ்அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் என 5 பேருக்கும், டிஜிபி அலுவலகத்தில் டிஎஸ்பி உட்பட 7 போலீஸார் என சென்னையில் நேற்று மட்டும் 38 போலீஸாருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
பல்வேறு இடங்களில் ஆய்வு
இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான நுங்கம்பாக்கம், காமராஜ
புரம் 3-வது தெரு, சூளைமேடு,சவுராஷ்டிரா நகர் 8-வது தெரு, ஐஸ்அவுஸ் ஈஸ்வரதாஸ் கோயில் தெரு ஆகிய இடங்களில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐஐடி வளாகத்தில், சிகிச்சை பெற்று வரும் போலீஸார் மற்றும் அரசு அலுவலர்கள் குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வுகளின்போது, கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.சுதாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜி.தர்மராஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.கரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் பகுதியில் பார்வையிட்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.