மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,643 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கடந்த 8-ம் தேதி கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 700 கன அடியும், கபினி அணையில் இருந்து 1,300 கன அடி என மொத்தம் 2 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும்.
இதன்படி, கர்நாடகாவில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட 2 ஆயிரம் கன அடி நீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நேற்று 1,292 கன அடி வந்த நிலையில், இன்று (ஜூன் 14) காலை நீர் வரத்து அதிகரித்து, 1,643 கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 100.73 அடியாக உள்ளது. அணையி்ல் நீர் இருப்பு 65.79 டிஎம்சி-யாக உள்ளது. அணைக்கு வரும் நீர் வரத்தைக் காட்டிலும், நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணை மட்டம் குறைந்து வருகிறது.