பெரம்பலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.8.68 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளதாவது:
"பெரம்பலூர் மாவட்டத்தில் 2020-21-ல் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, பயறு வகைகள் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 1,679 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க நிதி இலக்கு ரூ.8.68 கோடி பெறப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களான மக்காச்சோளம், துவரை, தென்னை, பருத்தி, கம்பு பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன கருவிகள், நிலக்கடலை, பயறு வகைகளுக்கு தெளிப்பு நீர் கருவிகள், மழைத் தூவான் அனைத்தும், 100 சதவீத மானியத்தில் பெறலாம்.
இத்திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளும், 75 சதவீத மானியத்தில் பெரிய விவசாயிகளும் பயன் பெறலாம். இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயி சான்று, அடங்கல், கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம்.
மேலும், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.