புதுச்சேரி காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் கடைகள் திறக்க அனுமதி மறுத்ததால் கூடிநின்று கேள்வி எழுப்பும் வியாபாரிகள்.  
தமிழகம்

புதுச்சேரி காந்தி வீதியில் 'சண்டே மார்க்கெட்' கடைகளை திறக்க அனுமதி மறுப்பு; வட்டாட்சியர், போலீஸாருடன் வியாபாரிகள் வாக்குவாதம்  

அ.முன்னடியான்

புதுச்சேரியில் காந்தி வீதியில் இயங்கி வரும் 'சண்டே மார்க்கெட்' கடைகளை திறக்க வட்டாட்சியர் மற்றும் போலீஸார் அனுமதி மறுத்ததால் அவர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி காந்தி வீதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'சண்டே மார்க்கெட்' செயல்படுகிறது. இங்கு வியாபாரிகள் கடை விரித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அனைத்து விதமான பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும். இதனால் பொருட்களை வாங்கி செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, 'சண்டே மார்க்கெட்' இயங்க தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஆனால், 'சண்டே மார்க்கெட்' இயங்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, 'சண்டே மார்க்கெட்' வியாபாரிகள் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கடைகள் போட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 14) வியாபாரிகள் 'சண்டே மார்க்கெட்' பகுதியான காந்தி வீதியில் கடைகளை போட்டனர்.

இத்தகவல் அறிந்ததும் புதுச்சேரி வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா மற்றும் பெரியகடை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கடைகள் போட அனுமதி மறுத்து, ஆட்சியர் உத்தரவின்றி கடைகளை போடக் கூடாது என தெரிவித்தனர்.

அதற்கு ஏஐடியுசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், "புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள், கடைகள், கோயில்கள் என அனைத்தையும் திறந்து விட்டனர். ஆனால், 'சண்டே மார்கெட்' இயங்கி 90 நாட்கள் ஆகிவிட்டது. இங்குள்ள வியாபாரிகள் தண்டலுக்கு கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றனர்.

3 மாதங்களாக கடை போடாததால் கடனும் அதிகரித்து விட்டது. வேறு வழியின்றி தொழிற்சங்கத்தில் முடிவு செய்து கடையை போட்டுள்ளோம். நாங்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்கிறோம்" என தெரிவித்தனர். அதனை வட்டாட்சியர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் வியாபாரிகள், அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா தொலைபேசி மூலம் மாவட்ட ஆட்சியர் அருணை தொடர்பு கொண்டு பிரச்சினை குறித்து தெரிவித்தார். அதற்கு ஆட்சியர், நாளை (ஜூன் 15) காலை 11 மணிக்கு வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக தெரிவித்தார். இதனையேற்று 'சண்டே மார்க்கெட்' வியாபாரிகள் திறந்த கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT