மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 1,241 பேர் விழுப்புரம் வந்தடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வேலை நிமித்தமாகச் சென்று ஊரடங்கால் கிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மும்பையிலேயே நிரந்தமாக வசிக்கிற தமிழர்கள் ஆகியோர் தமிழ்நாடு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இரு மாநில அரசுகளின் அனுமதியுடன் இதுவரையில் 6 சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டுக்கு இயக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இன்னும் மும்பையின் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கிற புலம்பெயர் தமிழர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ரயில் இயக்குவதற்கான முயற்சிகளை பல்வேறு தமிழ் அமைப்புகள் செய்தன. அதன்படி நேற்று முன்தினம் பிற்பகல் மும்பை போரிவலியில் இருந்து விழுப்புரத்துக்கு சிறப்பு ரயில் சுமார் 1,241 பயணிகளுடன் புறப்பட்டது.
இந்த ரயில் இயக்குவதற்கான முயற்சிகளை பல்வேறு தமிழ் அமைப்புகள் செய்தன. இந்த ரயில் நேற்று (ஜூன் 13) பிற்பகல் விழுப்புரம் வந்தடைந்தது. இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 317, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 660 பேர் மற்றும் கடலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்களை ஆட்சியர் அண்ணாதுரை வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு கரோனா சோதனைகளுக்குப்பின் சொந்த மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.