திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின் கூட்டப்படும் முதல் கூட்டம் இது.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (14-6-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில், எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
கூட்டத்தின் பொருள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திடீரென கூட்டப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் யோசனைகளைக் கூறுகிறார். ஆனால், அவர் அரசியல் செய்கிறார் என விமர்சித்து தமிழக அரசு கடந்து விடுகிறது.
சென்னையின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்க முடியும் என்பது யதார்த்தம் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோன்று அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முற்றிலும் ஒதுக்கப்படுவதும் பெரிய அளவில் அரசியல் பிரச்சினையாக மாறி வருகிறது.
தமிழக அரசு நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டுவதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின் அவர் இல்லாமல் கூட்டப்படும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் ஜெ.அன்பழகனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்படும்.