தமிழகம்

மறைமலை நகர் வீட்டுமனைகளுக்கு ஜூன் மாதம் மறுகுலுக்கல்- சி.எம்.டி.ஏ. முடிவு

எஸ்.சசிதரன்

மறைமலை நகர் வீட்டு மனைகளுக்கான மறுகுலுக்கலை ஜூன் முதல் வாரத்தில் நடத்த சிஎம்டிஏ முடிவெடுத்துள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), மறைமலை நகர், மணலி பகுதிகளில் தங்கள் வசம் உள்ள வீட்டுமனைகளையும், சாத்தாங்காடு மற்றும் கோயம்பேட்டில் உள்ள வர்த்தக ரீதியான மனைகள் மற்றும் கடைகளையும் குலுக்கல் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய ஜனவரியில் முடிவெடுத்தது. அதற்கான மனுக்களை வாங்க பொதுமக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டினர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 78 ஆயிரம் பேர் தலா ரூ.1000 செலுத்தி மனைகளுக்காக விண்ணப்பித்தனர்.

குலுக்கல் நிறுத்தம்

நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் மணலி பகுதியிலுள்ள வீட்டுமனைகளுக்கான குலுக்கல் அமைதியான முறையில் நடந்தது. ஆனால், மறைமலை நகர் வீட்டு மனைகளுக்கான குலுக்கலின்போது, 511551 என்ற எண்ணிற்கு குலுக்கல் மூலம் வீட்டு மனை அறிவிக்கப்பட, அது தவறான எண் என்று பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், குலுக்கல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இடையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மறு குலுக்கல் தடைபட்டது. தற்போது, தேர்தல் முடிந்துவிட்டதால், அந்த குலுக்கலை மீண்டும் நடத்துவது பற்றி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

ஜூன் முதல் வாரத்தில்

இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: மறைமலை நகரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரவினருக்கான 53 மனைகளின் குலுக்கல் முடிந்துவிட்டது. நடுத்தர பிரிவினருக்கான 15 மனைகளில் 10 மனைகளுக்கான குலுக்கலும் நிறைவடைந்துவிட்டது.

இப்பிரிவில் மீதமுள்ள 5 மனைகளுக்கும், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த 23 மனைகளுக்கும், உயர் வருவாய் பிரிவினருக்கான 7 மனைகளுக்கும், ஜூன் முதல் வாரத்தில் குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உயரதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குலுக்கலில் வென்றவர்களுக்கு...

குலுக்கலில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்களுக்கு, மனைக்கான விற்பனைப் பத்திரம் (சேல் டீட்) இன்னும் தரப்படவில்லை. அவர்கள் முழுப்பணத்தையும் கட்டிவிட்டு மனைகளை வாங்கலாம் அல்லது கடன் பெறுவதற்கு ஏதுவாக கரூர் வைஸ்யா வங்கி, பெடரல் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவற்றுடன் சிஎம்டிஏ உடன்படிக்கை செய்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT