விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பணியாற்றிய 4 குழந்தைத் தொழிலாளர்களும் வளர் இளம் பெண்கள் 4 பேரும் மீட்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களில் 9 முதல் 14 வயதுடைய குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதைக் கண்டறிந்து அவர்களை மீட்டு கல்விபெறச் செய்யும் வகையில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நேற்று குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் உத்தரவிட்டார்.
அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சித்ரா, உதவி இயக்குநர் சீனிவாசன், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மருத்துவர் சுகுமாரன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆர்.ஆர். நகர் அருகே ஆவுடையாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 9,10 மற்றும் 11 வயதுடைய இருவர் உள்ளிட்ட 4 குழந்தைத் தொழிலாளர்களும், 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 4 வளரிளம் பெண்களும் மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதோடு, முறையான அறிவுரைகள் கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய தனியார் பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.