சட்டப்பூர்வமாக இணைய முடக்கம் செய்வது எப்படி என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தொழில்நுட்ப விழாவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் கடந்த 9-ம் தேதி தொடங்கி இன்று (12-ம் தேதி) வரை தொழில்நுட்ப விழாவான ‘ஆரூஷ் ‘15’ நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாணவர்கள் தங்களின் தொழில்நுட்ப அறிவையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்த 14 பிரிவுகளில் 50 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது தவிர கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
அன்கித் ஃபாதியா என்பவரால் இணையத்தை முடக்குவதற்கு முறையான வழிகள் பற்றி பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. வித்தியாசமான இந்த தலைப்பில் நடைபெற்ற பயிற்சியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கம்பியில்லாத சென்சார் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்தும் பயிற்சிகள் நடைபெற்றன.
பள்ளி பருவத்திலேயே கோ டைமன்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை செயல் இயக்குநர் மற்றும் தலைவராக உள்ள ஷ்ரவண் குமார் மற்றும் சஞ்சய் குமார் சகோதரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகள் தவிர பல கலை தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மணல் சிற்பக்கலை கலைஞர் விவேக் படேல் தனது அழகிய மணல் சிற்பங்களால் மாணவர்களின் மனதை கவர்ந்தார். 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மொத்தம் 5000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.