வெளியூர்களில் இருந்து இ-பாஸ் பெற்றும், பெறாமலும் வந்த நபர்களுக்கு காய்ச்சல் தொந்தரவு இருக்கிறதா? என்பதைக் கண்டறிய தன்னார்வலர்கள் மூலம் மாநகராட்சி நிர்வாகம் இன்று முதல் கணக்கெடுப்பு பணியை 100 வார்டுகளில் தொடங்கியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 2 வாரம் முன் வரை ஒரளவு ‘கரோனா’ தொற்று நோய் கட்டுக்குள் இருந்தது. தற்போது மீண்டும் இந்த தொற்று நோய் வேகம் எடுத்துள்ளது.
கடந்த 10-ம் தேதி 10 பேருக்கும், 11ம் தேதி 19 பேருக்கும், நேற்று 12-ம் தேதி 31 பேருக்கும் ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் மதுரையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதே விகித்தில் சென்றால் சென்னையைப் போல் மதுரையில் ‘கரோனா’ சமூக பரவல் நிலையை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அதனால், ‘கரோனா’வை தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை முதியோரை பாதுகாக்க அவர்கள் வசிக்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி ஒருபுறம் நடக்கிறது. மற்றொரு புறம், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பங்களிப்பாளர்கள் பங்களிப்புடன் இலவசமாக வைட்டமின் மாத்திரை, ஜிங்க் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் சூரணப் பொடி தொடர்ந்து வழங்கப்படுகிறது.
மேலும், கரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் வகையில் மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் 09ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் குறித்து வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:
இப்பணியில் 155 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், 530 டெங்கு தடுப்பு பணியாளர்கள், 400 அங்கன்வாடி ஆசிரியர்கள், இதயம் டிரஸ்ட், கபடி விளையாட்டு குழுவினர் என சுமார் 200 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு வீடாக காய்ச்சல், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் வரும் நபர்கள் என பல்வேறு கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் இருந்தால் மதுரை மாநகராட்சியின் தகவல் மைய எண் 842842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெறலாம். வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் பகுதிக்கு யாரேனும் வருகை தந்து இருந்தால் மேற்கண்ட தகவல் மைய எண்ணில் தகவல் தெரிவிக்கலாம், ’’ என்றார்.