தமிழகம்

தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க ஜெ. அழைப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசு சார்பில் முதன்முதலாக நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று முதலீட் டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய அளவில் அந்நிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் முக்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல் பட்டு வரும் தமிழகத்துக்கு, மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ கத்தில் முதன்முதலாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி, செப்டம்பர் 9,10-ம் தேதி களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடு களுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடந்தன. மாநாட்டு பங்குதாரர்களாக இந்திய தொழில் கூட்டமைப்பும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையும் நியமிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் நாடுகளும் மாநாட்டின் பங்குதாரர்களாக இணைந்தன.

பல்வேறு நாடுகளில் தமிழக தொழில் துறை, வேளாண், எரிசக்தி உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சிகள், முன்னோட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு, அந்த நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்தும், வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டன. இதையடுத்து, பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும், தமிழகத்தில் முதலீடு செய்யவும் முன்வந்தனர்.

தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்க ளிலும் கண்காட்சி மற்றும் முன்னோட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு, அங்குள்ள முதலீட்டாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டின் ஒரு பகுதியாக சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாடு மற்றும் கண்காட்சியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

மேலும், காஞ்சிபுரத்தில் ரூ.1600 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய யமஹா மோட்டார் நிறுவனம், ரூ.168 கோடி முதலீட்டில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்காவின் இரண்டாம் பிரிவையும், ஒசூரில் ரூ.800 கோடியில் நிறுவப்பட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவன விரிவாக்க மையத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

முதலீட்டாளர்கள் மத்தியில் முதல்வர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் முதலீடு செய்தால் அது சிறந்த முதலீடாக அமையும். சிறந்த, உழைக்கும் திறமை வாய்ந்த, நம்பத்தகுந்த மனித வளம் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் பயணத்தில் நீங்களும் எங்க ளோடு இருந்து பயணிக்க வேண்டும்’’ என்றார்.

விழாவில் பங்கேற்ற மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘தமிழகம் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக திகழ் கிறது’’ என்றார். தரைவழி போக்கு வரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசும்போது, ‘‘சாலை போக்குவரத்துத் துறையில் இணைந்து பணியாற்ற முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

இத்தாலி, ரஷ்ய நாடுகளின் தூதரக அதிகாரிகள், பிரான்ஸ், ஜப்பான் நாடு களின் வர்த்தக சபை ஒருங்கிணைப் பாளர்கள், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் அ.சவுந்தரராஜன், க.பீம்ராவ், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, வேணு சீனிவாசன், ஷிவ் நாடார், கருமுத்து கண்ணன், ஆனந்த் மகேந்திரா உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டனர்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து, பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாநாட்டை யொட்டி வர்த்தக மைய பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விழா துளிகள்..

* விழா தொடங்குவதற்கு முன்பாக ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் ‘அருள் புரிவாய் தாயே..’ என்ற பாடலை பாடினர்.

* அதைத் தொடர்ந்து முதலீட்டாளர் களை கவரும் வகை யிலும் பாரம்பரிய பரத கலையை விளக்கும் வகையிலும் ஊர்மிளா சத்திய நாராயணா குழுவினரின் ‘ஒளி நடனம்’ இடம் பெற்றது.

* டிஜிட்டல் மற்றும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில், பறக்கும் குதிரை ஒன்று மாநாட்டு அரங்கில் பறந்து சென்று, மேடையில் முதல்வர் ஜெயலலிதா முன் வந்து வணங்குவது போன்று திரையிடப்பட்ட காட்சி அனைவரையும் கவர்ந்தது.

* மாநாட்டுக்கு வந்த முதலீட்டாளர் களை வரவேற்கும் வகையில், சென்னையின் முக்கிய சாலைகளில் 16 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு தமிழ கத்தின் பல்வேறு கலைகளை விளக்கும் வகையில் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

* முதல்வரை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள், கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

* போயஸ் கார்டனில் இருந்து நந்தம்பாக்கம் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான அதிமுக வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்து முதல்வரை வரவேற்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தடுப்புகளை அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்

SCROLL FOR NEXT