பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உட்பட மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்வு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உட்பட மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 163 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 84 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், அரும்பார்த்தபுரத்தை தற்காலிக முகவரியாக தெரிவித்திருந்த விழுப்புரம் மாவட்டம் குமளம் பகுதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 13) புதிதாக மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் ஒரே தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், தவளக்குப்பத்தை சேர்ந்த 3 பேர், விவிபி நகரில் ஒருவர், வீமன் நகரில் இருவர், சின்ன கொசப்பாளையத்தில் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 12 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 49 பேர், ஜிப்மரில் 36 பேர், காரைக்காலில் ஒருவர், மாஹே பிராந்தியத்தில் 3 பேர், பிற பகுதியில் 2 பேர் என 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மரில் 4 பேர், மாஹேவில் ஒருவர் என 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 176 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 9,658 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9,352 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 132 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன.

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக தினமும் 6 பேர் முதல் 10 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 அல்லது 4 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. கணக்கிட்டுப் பார்க்கையில் இம்மாத இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று மருத்துவ ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதனைக் குறைக்க வேண்டும் என்றால், மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். சோலை நகர், நெய்தல் வீதி, கவுண்டம்பாளையம், வடமங்கலம், அன்னை தெரசா நகர், மூகாம்பிகை நகரில் 9-வது குறுக்குத் தெரு உள்ளிட்ட 6 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் கடை தெருக்களில் நடமாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். இதனை பல முறை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே 90 சதவீதப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்" என்று மோகன்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT