தமிழகம்

சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டத் தடை: கிராமப் பஞ்சாயத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

செய்திப்பிரிவு

சித்தாலப்பாக்கம் ஏரியில் டன் கணக்கில் குப்பை கொட்டி ஏரியை மாசடைய வைப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஏரியில் குப்பைக் கொட்டத் தடை விதித்த உயர் நீதிமன்றம், கிராமப் பஞ்சாயத்து சிறப்பு அதிகாரி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் கிராமப் பஞ்சாயத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சார்பில் வழக்கறிஞர் சிலம்பரசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “சித்தாலப்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நீர் ஆதாரத்துக்கு முக்கியமானதாக ஏரி உள்ளது. இங்கு டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. சில நேரங்களில் குப்பைகள் எரிப்பதால் வெளியாகும் விஷவாயு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்குப் பதிலளிக்கும்படி சித்தாலப்பாக்கம் கிராமப் பஞ்சாயத்து சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டது. மேலும், ஏரியில் குப்பைகள் கொட்டுவதற்குத் தடை விதித்தும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT