மும்பை தமிழர்களை ரயில் ஏற்றிவிட்ட தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். 
தமிழகம்

மும்பை தமிழர்களுக்காக 6-வது சிறப்பு ரயில்- நாளை விழுப்புரம் வந்தடையும்

கே.கே.மகேஷ்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு வேலை நிமித்தமாகச் சென்று ஊரடங்கால் மாட்டிக்கொண்ட புலம்பெயர்த் தொழிலாளர்கள், மும்பையிலேயே நிரந்தமாக வசிக்கிற தமிழர்கள் ஆகியோர் தமிழ்நாடு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இரு மாநில அரசுகளின் அனுமதியுடன் இதுவரையில் 6 சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்னும் மும்பையின் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கிற புலம்பெயர்த் தமிழர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ரயில் இயக்குவதற்கான முயற்சிகளை பல்வேறு தமிழ் அமைப்புகள் செய்தன. அதன்படி, இன்று மும்பை போரிவலியில் இருந்து விழுப்புரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஆயிரம் பயணிகளுடன் இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த ரயில் புறப்பட்டது. இது நாளை விழுப்புரம் வந்தடையும் என்று ரயில்வே அறிவித்திருக்கிறது.

தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியை ’மும்பை விழித்தெழு இயக்கம்’ சார்பில் வழக்கறிஞர் மஞ்சுளா, பாண்டியன், அசோக் ஆகியோரும், ரயில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை Hunger Collective என்ற அமைப்பின் ராஜாஸ்ரீ சாய், விவேக் ஆகியோரும் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT