மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு ‘கரோனா’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தலைநகர் சென்னைபோல் தூங்கா நகரமான மதுரையில் கரோனா வேகமாகப் பரவவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த ஒரு வாரம் முன் வரை ‘கரோனா’ கட்டுக்குள்ளாகவே இருந்தது. சென்னையில் இருந்து இ-பாஸ் பெற்றும், பெறாமலும் மதுரையில் ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர்.
அவர்கள், சென்னையிலும் ‘கரோனா’ பரிசோதனை செய்யவில்லை. மதுரை வந்தும் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. வீட்டிலும் அவர்கள் தங்களை முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஊரைச் சுற்ற ஆரம்பித்தனர்.
ஏற்கெனவே மதுரையில் கரோனா கட்டுக்குள் இருந்ததாலும், இந்த நோயால் பெரிய உயிரிழப்பு ஏற்படாததாலும் அந்த நோயைப் பற்றிய அச்சம் மக்களிடம் விலக ஆரம்பித்தது. அதனால், மக்கள் பொதுவெளிகளில் முகக்கவசம் கூட அணியாமல் உலாவத் தொடங்கினர். ஆட்டோக்களில் 2 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ஆட்டோக்களில் 6 முதல் 10 பேர் வரை பயணம் சென்று வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் முககவசம், ஹெல்மெட் அணியாமல் செல்லோவோரை வழிமறித்து அபராதம் விதிக்கும் போலீஸார், ஆட்டோக்களை மட்டும் ஏனோ கண்டுகொள்ளவில்லை. அதுபோல்,
புறநகர் பஸ்கள், மாநகர பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கும் அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள், மாநகர காவல்துறை போலீஸார் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்தும் மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளி இல்லாமல் கூடுவதை தவிர்க்க முடியவில்லை.
அதனால், கடந்த 3 நாட்களாக மதுரையில் ‘கரோனா’ நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சில வாரமாக சில நாட்கள் ஒற்றை இலக்கத்திலும், சில நாட்கள் இல்லாமலும் ‘கரோனா’ பரிசோதனை முடிவுகள் வந்தன.
அதனால், மாவட்ட அதிகாரிகள் ஒரளவு ஆறுதல் அடைந்து இருந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி 10 பேருக்கும், 11ம் தேதி 19 பேருக்கும், நேற்று 12ம் தேதி 31 பேருக்கும் ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் மதுரையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதே விகித்தில் சென்றால் மதுரையில் ‘கரோனா’ சமூகப் பரவல் நிலையை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.