ஜீவக்குமார். 
தமிழகம்

அணையைத் திறந்துவிட்டார்கள்; கால்வாய்களைத் தூர்வாராமல் காலைவாரி விட்டார்களே!-கவலைக்குரல் எழுப்பும் காவிரி டெல்டா விவசாயிகள்

கரு.முத்து

காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அணையைக் குறித்த காலத்தில் திறப்பதற்கு எடுத்துக்கொண்ட அக்கறையைக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளில் அரசு காட்டவில்லை எனக் கவலைப்படுகிறார்கள் டெல்டா விவசாயிகள்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை உரிய காலமான ஜூன் 12-ல் இன்று திறக்கப்பட்டது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டுதான் ஜூன் 12- ல் திறக்கப்பட்டது. மற்றபடி கர்நாடகத்தின் ஒத்துழையாமையால் அணைக்குப் போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் போய் காலம் கடந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தான் அணை திறக்கப்படும். அதை வைத்து ஒருபோகமாகச் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறும்.

காலத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி என்பதே குறைந்து போய்விட்டது. மோட்டார் பம்ப் செட்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே குறுவை சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 12-ல் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறும். இதனால் இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும். அத்துடன், மழைக்காலத்தில் வீணாகும் உபரி நீரைக்கொண்டு காவிரிக் கரை நெடுகிலும் உள்ள 100 ஏரிகளை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜூன் 12- ல் மேட்டூர் அணை திறக்கப்படுவது குறித்து விவசாய தொழிலார்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசுகையில், “இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்று தோன்றுகிறது. இப்போது இருக்கும் தண்ணீர் 50 நாட்களுக்குப் போதும். அதற்குள் கர்நாடக உபரிநீர் வரத் தொடங்கி விடும். அதுவும் போனாலும் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகி விடும். இது முழுக்க முழுக்க இயற்கை நமக்கு அளித்த வரம்.

கடந்த ஆண்டு அதிக மழை காரணமாக கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய அளவைவிடக் காவிரியில் அதிகமாகவே நீர் வந்துவிட்டது. கடந்த ஆண்டு 2019 ஜூன் மாதத்திலிருந்து 2020 மே மாதம் வரை கர்நாடகம் தரவேண்டியது 177.25 டி.எம்.சி. ஆனால் அந்த அளவையும் தாண்டி 275 டி.எம்.சி. நமக்குக் கிடைத்துள்ளது. இப்படி கர்நாடகம் உபரி நீரை நமக்குத் திறந்து விட்டதால் முந்நூறு நாட்களுக்கும் மேலாக மேட்டூரில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் திறக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த நீர் கடைமடை வரை சரியாகப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காரணம், தூர் வருகிறோம் என்ற பெயரில் நடைபெறுகிற ஊழல்கள். எங்கேயாவது சில இடங்களில் மட்டுமே ஆறுகள் தூர் வாரப்படுகின்றன. பெரும்பாலான இடங்கள் பணிகள் ஒழுங்காக நடக்கவில்லை. தஞ்சாவூரில் வடவாறில் புதர் மண்டிக் கிடக்கிறது. கொள்ளிடம் பகுதியில் முக்கியப் பாசன வாய்க்காலான ராஜன் வாய்க்கால் தூர் வாரப்படவில்லை.

மொத்தம் 45 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் இருந்த நிலையில் தற்போது 1,500 முதல் 2,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால்களே இல்லை என்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்து போயும் உள்ள அவற்றைக் கண்டறிந்து புதுப்பிக்க எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

இன்னொரு பக்கம், குடி மராமத்து என்கிற பேரில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. விவசாயிகளைத் தவிர்த்துவிட்டு ஆளும் கட்சிக்காரர்கள் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள். இதோ மேட்டூர் திறந்தாகிவிட்டது. இனி வாய்க்காலில் நீர் வந்துவிடும். அரைகுறையாக நடைபெற்ற பணிகளை முழுமையாக முடித்தது போல கணக்குக் காட்டிவிடுவார்கள். மொத்தத்தில், ’சோழ நாடு சோறு உடைத்து’ என்ற பழமொழி இனி, ‘ஊழல் உடைத்து’ என்று மாறிவிடும் போலிருக்கிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT