தமிழகம்

மதுபாட்டில்களில் ஒட்ட போலி ஹோலோகிராம்: அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய புதுச்சேரி தனியார் டிஸ்லெரிக்கு சீல்

செ.ஞானபிரகாஷ்

மதுபான பாட்டில்களில் ஒட்ட போலி ஹோலோகிராம் தயாரித்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புதுச்சேரியிலுள்ள தனியார் டிஸ்லெரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, மங்களத்தில் தனியாருக்குச் சொந்தமான பிரிமியர் டிஸ்லெரி செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மொத்த மதுபானக் கடைகள், டிஸ்லெரி ஆகியவை மதுபான பாட்டில்களில் அரசின் ஹோலோ கிராம் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும். ஹோலோகிராம் ஸ்டிக்கர்கள் மூன்று வகையில் அரசு தரப்பில் தரப்படுகின்றன. உள்ளூர் விற்பனை, வெளி மாநில விற்பனை, வெளிநாடு விற்பனைக்கு என மூன்று விதங்களில் தரப்படுகின்றன. இதன் ஒன்றின் விலை 34 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படுவோர் மதுபாட்டில்களுக்கு ஏற்ப அரசிடம் தொகை செலுத்தி ஹோலோகிராம் ஸ்டிக்கர் வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக வெளி மாநிலங்களுக்கு விற்பனை என்றால் அதற்கான ஹோலோகிராம் பெற்று, பர்மிட் பெற்று அனுப்புவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் ஹோலோகிராமை போலியாகத் தயாரித்து விற்பதாகப் புகார்கள் வந்தன.

இதையடுத்து மங்களத்தில் உள்ள பிரிமியர் டிஸ்லரிக்குக் கலால் துறை துணை ஆணையர் கவாஸ், எஸ்எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் சென்று சோதனையிட்டனர். அங்கு போலியான ஹோலோகிராம் அதிகளவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றைக் கலால் துறையினரும், போலீஸாரும் கைப்பற்றிப் பெட்டியில் எடுத்து வந்தனர். அரசு வருவாய்க்கு எதிராக கணக்கைக் குறைத்துக் காட்டியதுடன், போலி ஹோலோகிராம் தயாரித்தது உள்ளிட்ட காரணத்தால் டிஸ்லெரிக்கு சீல் வைக்கப்பட்டது. யாரும் உள்ளே நுழைவதைத் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதைத் தொடந்து கலால்துறை தாசில்தார் ரவிசந்திரன் மங்களம் போலீஸில் புகார் தந்தார். போலீஸாா் எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து டிஸ்லெரி தரப்பு நபர்களைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT