தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாகவில்லை. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு, கட்டிடத்தை திறந்து வைத்து, 568 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு போன்று பயன்படுத்தும் வகையிலான உழவர் அட்டைகளையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவல் ஏற்படவில்லை. எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, சென்னை போன்ற பிற இடங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் தான் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவியுள்ளது. மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மூலம் பரவவில்லை. எனவே, சமூக தொற்று ஏற்படவில்லை.
இலங்கை மற்றும் மாலத்தீவில் தவித்த இந்தியர்கள் 2 கப்பல்கள் மூலம் ஏற்கனவே தூத்துக்குடி வந்தனர். இதனை தொடர்ந்து வரும் 21-ம் தேதி ஈரானில் இருந்து ஒரு கப்பல் தூத்துக்குடி வருகிறது. இதில் அந்நாட்டில் தவிக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை மீனவர்கள் வருகின்றனர் என்றரா் அமைச்சர்.