தமிழகம்

நெசவாளர்களை வஞ்சிக்கும் போக்கை கைவிடாவிட்டால் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: ஐ.பெரியசாமி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நெசவாளர்களை வஞ்சிக்கும் போக்கை தமிழக அரசு கைவிடவேண்டும். இல்லாவிட்டால் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 4000 நெசவாளர்கள் பாரம்பரியத் தொழிலான நெசவுப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

கரோனா பேரிடர் காலத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவிற்கு முன்னர் நெசவு செய்த சேலைகளுக்கு இதுவரை ஊதியம் வழங்காமல் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

புதிதாக நெசவு செய்ய நூல், பாவு ஆகியவை வழங்க மறுக்கின்றனர். நெசவாளர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் நிவாரணம் கிடைக்காமல் உள்ளனர். இதனால் அவர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

எனவே, தமிழக அரசு நெசவாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்கவும், உரிய கூலி கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்''.

இவ்வாறு திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT