சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்றுநடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று பேசியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில், பரிசோதனை மையங்களில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ளஅனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைரஸ்பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க 6 ஆயிரம்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவர்கள் பாதிக்கப்பட்டோரின் சுயவிவரங்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ரெட்டி, துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.