தமிழகம்

கரோனாவை தடுக்க ‘நானோ’ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசம்: காமராசர் பல்கலை பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு 

என்.சன்னாசி

கரோரனாவைத் தடுக்க, நானோ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசத்தை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆரோக்கிய தாஸ், அசோக்குமார் ஆகியோர் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான ‘நானோ ’ தொழில்நுட்பத்தில் நவீன, புதிய சுவாசக் கருவி(முகக்கவசம்) ஒன்றை தயாரித்துள்ளனர்.

பல்கலை துணைவேந்தர் எம். கிருஷ்ணன் முன்னிலையில் இக்கருவி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனை நானோ மெட்டீரியல், மின்காந்தவியல் மூலம் தனியாக பிரித்தெடுத்து, சுவாச கருவியினுள் செலுத்தி நுரையீரல் நன்றாக செயல்பட உதவும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது என, இரு பேராசிரியர்களும் தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து அவர்கள் கூறியதாவது:

இக்கருவி மூலம் தூய்மையான காற்று கிடைக்கும். வளி மண்டலத்திலுள்ள 20.9 சதவீத ஆக்சிஜனை 33 சதவீத ஆக்சிஜனாக மாற்றித்தரும். 100 கிராமுக்கு குறைவான எடையை கொண்டது. பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவியில் ரீசார்ஜ் வசதி உள்ளது.

மலிவான நானோ மெட்டீரியலால் தயாரிக்கப்பட்டது. நோயாளிக்கு தகுந்த மாதிரி தனக்குத் தானே மாற்றி அவர்களுடைய சுவாசம், நுரையீரல் பாதிக்காமல் சுவாச தன்மைக்கேற்ப செயல்படக்கூடியது.

வெண்டிலேட்டர், சுவாச கருவி இரண்டும் இணைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்போதும் அணியவும், செயல்படும் வகையிலும் கண்டுபிடித்துள்ளோம்.

இந்த முகக்கவசம் நோயாளிகளுக்கு மட்டுமின்றி எங்கெல்லாம் சுவாசத்திற்கு ஆக்சிஜன் அளவு குறைவாக கிடைக்கிறதோ அங்கெல்லாம் அனைவரும் அணியவும், வாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினியால் சுத்தப்படுத்திவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம். இதர காரணிகள் பரிசோதனைக்கு பிறகு விரைவில் மக்கள் உபயோகத்திற்கு கொண்டு வரப்படும், என்றனர்.

துணைவேந்தர் கூறுகையில், "இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளால் கரோனாவை தடுக்கும் முயற்சியாக எங்களது பேராசிரி யர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.

இக்கருவி கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். ஊரடங்கால் தனித்து இருக் கும் சூழலிலும், தங்களது நேரத்தை ஆராய்ச்சிக் கென பயன் படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதது" என்றார்.

SCROLL FOR NEXT