பொதுப்பணித்துறை பாசன ஆண்டின் அட்டவணைப்படி, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய காலமான ஜூன் 12-ம் தேதியான நாளை, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமி நாளை காலை மேட்டூர் அணையில் இருந்து நீரைத் திறந்து விடுகிறார்.
தமிழகத்தின் மிகப்பெரும் நீர்த்தேக்கமான மேட்டூர் அணை காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களின் பாசனத்துக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு வசதியாக, பொதுப்பணித்துறை பாசன ஆண்டு அட்டவணைப்படி, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம்.
எனினும், அணையின் நீர் இருப்பைப் பொறுத்தே, ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட்டு வந்தது. மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்கு ஆகஸ்ட் 13-ம் தேதியில்தான் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் தற்போது 101.72 அடி உயரத்துக்கு நீர் உள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை பாசன ஆண்டு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, டெல்டா பாசனத்துக்கு நாளை (ஜூன் 12) காலை நீர் திறக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதியன்று நீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாகவும், காலதாமதமாகவும் நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய காலமான ஜூன் 12-ம் தேதியன்றே பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து, டெல்டா பாசனத்துக்கான நீரைத் திறந்து விடுகிறார். இதனை முன்னிட்டு, மேட்டூர் அணை வளாகத்தில், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,439 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டுள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 67.08 டிஎம்சியாக உள்ளது.