தமிழகம்

மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் 400-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 389 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி ராஜபாண்டிநகரை சேர்ந்த 23 வயது இளைஞருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குடல் அழற்சி அறுவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்த போது கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அந்த இளைஞர் வெளியூர் ஏதுவும் செல்லவில்லை. அவரது சகோதரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அந்த இளைஞர் மருத்துவனைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மார்க்கெட் பகுதிக்கும் சென்று வந்துள்ளார். எனவே, அவருக்கு எப்படி கரோனை தொற்று ஏற்பட்டது என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் உள்ள 8 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த 58 வது பெண், ஆறுமுகநேரி பேயன்விளையை சேர்ந்த 27 வயது இளைஞர், திருச்செந்தூர் வள்ளிவிளையை சேர்ந் 2 இளைஞர்கள், செய்துங்கநல்லூரை சேர்ந்த 52 வயது பெண், சென்னையை சேர்ந்த 25 வயது பெண் ஆகியோருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் பெரும்பாலானவர்களுக்கு சென்னை தொடர்பு மூலம் தொற்று பரவியுள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 264 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

SCROLL FOR NEXT