தமிழகம்

ராமநாதபுரத்தில் கரோனா பணியில் ஈடுபட்ட 12 அரசு ஊழியர்களுக்கு தொற்று; இன்று 7 பேருக்கு பாதிப்பு: ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பணியில் ஈடுபட்ட 12 அரசு ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 15 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு காலத்தில் மாவட்டத்தில் 4,593 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு ஊக்கத்தொகையாக ரூ.1.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 7,447 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 140 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதில் கரோனா பணியில் உள்ள 900 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 12 அரசு ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸாரால் 4,632 வழக்குகள் பதியப்பட்டு, 7,142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 926 கடைகளுக்கு ரூ. 6,85,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி உடனிருந்தார்.

ஏழு பேருக்கு கரோனா:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 128 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் 7 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் 135 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT