தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். 
தமிழகம்

தூத்துக்குடியில் கரோனா சமூகப் பரவலாக மாறாமல் இருக்க தீவிர தடுப்புப் பணிகள்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவாலாக மாறாத வகையில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் தினமும் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் தூத்துக்குடி நகரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், தென்திருப்பேரை, காயல்பட்டினம், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், தெற்கு ஆத்தூர் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா தொற்று பரவியுள்ளது.

இதனால் கரோனா தொற்று சமூக பரவல் ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவல் ஏற்படவில்லை. சமூக பரவல் ஏற்படாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் ஆகிய கரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவல் ஏற்படாத வகையில் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்கள் என எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், துணை ஆட்சியர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT