கே.பாலகிருஷ்ணன் - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா: இதுவரை நடந்த பணிகளில் என்ன தவறு நேர்ந்துள்ளது? - 10 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு தொடர்பாக, இதுவரை நடந்த பணிகளில் என்ன தவறு நேர்ந்துள்ளது என்பதை தமிழக அரசு கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 11) முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:

"தமிழக அரசு கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறது. எனினும், அந்த நடவடிக்கைகள் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் பின்னணியில் ஒரு நாளைக்கு 2,000 என்ற எண்ணிக்கையில் நோய் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. இந்த எண்ணிக்கையும் கூட சோதனை செய்யப்பட்டவர்களில் நோய்த் தொற்று உள்ளவர்கள் மட்டுமே ஆகும். சோதனை செய்யப்படாதவர்களில் எவ்வளவு பேருக்கு தொற்று உள்ளது என்பதைக் கணக்கிட முடியாது.

சென்னை பெருநகரத்திலும், அருகாமை மாவட்டங்களிலும் பாதிப்புகள் கடுமையாக உள்ளன. தினசரி மரணங்களின் எண்ணிக்கை அதிரிப்பதும் அச்சுறுத்துவதாக உள்ளது. அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் பாதிப்பின் அளவைக் குறைத்துக் காட்டுவதாக பத்திரிகை செய்திகளின் மூலம் தெரிய வருகிறது. சென்னையில் மட்டும் கரோனா மரணங்களின் எண்ணிக்கை 499 என்பதை மாநகராட்சி பதிவேடு தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன. அரசு தனது அறிக்கைகளில் சொன்னதை விட இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகும். ஏன் இந்த மரணங்களின் எண்ணிக்கையில் முரண்பாடு என்பதை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கரோனா நோய்த் தொற்று தினமும் அதிகரிக்கிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லை எனவும் பல நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே உள்ள மருத்துவர்கள், செவிலியர்களில் ஒருபகுதி கரோனா சிகிச்சைப் பணிகளில் உள்ளார்கள். அதிலும் 50 சதவீதம்தான் ஒரு நேரத்தில் பணியில் இருக்க முடியும். மீதமுள்ள ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள், இது அவசியம். மேலும், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதன் விளைவாகவே செவிலியர்கள் வேறு வழி இல்லாமல் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவப் பணியாளர்கள் பெரும் எண்ணிக்கைகளில் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதுவரை இரண்டு மருத்துவர்கள், ஒரு தலைமைச் செவிலியர் உட்பட சில அரசுப் பணியாளர்களும் மரணமடைந்திருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் இன்னும் கரோனாவை எதிர்கொள்ளும் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தப்படவில்லை. இவற்றின் காரணமாக கரோனா மரணங்களில் சுமார் 60 சதவிகிதம் மருத்துவமனையில் இடம் கிடைத்த ஓரிரு நாட்களில் நடந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நோய் முற்றிய கட்டத்தில்தான் அவர்களுக்கு சிகிச்சையே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாத காலத்தில் பலகட்ட ஊரடங்கு, தயாரிப்பு ஏற்பாடுகளுக்கு பிறகும் இதுதான் நிலைமை என்றால், எங்கு தவறு நடந்திருக்கிறது என்ற சுய மதிப்பீடு அரசுக்கு தேவைப்படுகிறது. அரசு அமைத்த குழுவினரும் கூட மருத்துவமனைகளிடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். கரோனா தடுப்புப் பணிகளில் என்ன தவறு நேர்ந்தது என்பதை பரிசீலித்து சரி செய்வது அவசியம்.

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் மட்டும் லட்சக்கணக்கானவர்களுக்கு நோய்ப் பரவல் ஏற்படும் என எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதையே தமிழக அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இச்சூழலில் சரியாக திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே மக்களை பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும். நிலைமையின் தீவிரத்திற்கு ஏற்ப அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இக்காலத்தில் கரோனா சிகிச்சை மட்டுமல்லாது இதர நோய்களுக்கான சிகிச்சைகளும் தடையின்றி கிடைக்க வேண்டும்.

ஆகவே, நிலைமைகளை சீர்ப்படுத்த கீழ்க்காணும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

1. கரோனா நோய்ப் பரவல் மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் பகிர வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தால்தான் அதற்கேற்ப செயல்பட முடியும். இதுவரை நடந்த பணிகளில் என்ன தவறு நேர்ந்துள்ளது என்பதையும் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்

2. சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களில் நோய்ப் பரவல் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமலாக்கலாமா என்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அமலாக்குவது குறித்து அரசு முடிவெடுக்கும்பட்சத்தில் போதிய கால அவகாசம் கொடுத்து அறிவிக்க வேண்டுமெனவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இக்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இது மட்டுமன்றி துரித பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனைகளை முடுக்கிவிட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்குத்தான் பரிசோதனை என்ற எழுதப்படாத நிபந்தனையை அரசு கைவிட வேண்டும்.

3. சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் படுக்கை வசதிகள் மற்றும் 20 ஆயிரம் தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளை கரோனா சிகிச்சைக்கு உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளை முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். சிறப்பு சிகிச்சை மையங்களையும் கூடுதலாக உருவாக்க வேண்டும். நோய் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் சிகிச்சையை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளை அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், இதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு ஆகும் செலவுகளை அரசு நிதி அல்லது காப்பீட்டுத் திட்டம் மூலம் வழங்கிட வேண்டும்.

4. தேவை பெருகி வருகிற சூழலில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். அரசு ஒப்பந்த முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தவிர்த்து தேவையான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்களை நிரந்தரமான முறையில் பணியமர்த்திட வேண்டும். ஏற்கெனவே பணி நிரந்தரம் செய்யப்படாத அனைத்து செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். மருத்துவத்துறை என்பது மக்களின் உயிர்காக்கும் முக்கியமான சேவைத்துறையாகும்.

எனவே, இத்துறைக்கு மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்யாமல் நிரந்தரப் பணி என்கிற முறையில் தேர்வு செய்திட வேண்டும்.

5. கரோனா சிகிச்சை மட்டுமல்லாது மாநிலத்தில் இதர சுகாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தனியார் கட்டமைப்புகளையும் பயன்படுத்தினால் மட்டுமே தேவைக்கு ஈடு கொடுக்க முடியும். அனைத்து மருத்துவமனைகளையும் எந்த சுணக்கமும் இல்லாமல் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

6. நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் வரிசை சுகாதார ஊழியர்கள், காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட பணப் பயன்கள் மற்றும் காப்பீடு போன்றவை இன்னும் வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இப்பணியின் நிமித்தம் உயிரிழக்க நேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு காப்பீட்டுத் தொகை ரூபாய் 50 லட்சமும், இழப்பீடு ரூபாய் 50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.

7. நோய் பாதிப்புள்ளவர்கள் மருத்துவ உதவிக்காக தொடர்பு கொள்ள அதிகாரிகளையும், அதற்கான தொடர்பு எண்களையும் அறிவிக்க வேண்டும். நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதை முற்றாக தடுப்பதற்கு இணையதளம் மற்றும் 'கால் சென்டர்' வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சிகிச்சை மறுப்பு மற்றும் கட்டணக் கொள்ளை ஆகியவற்றை முற்றாகத் தடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு உடனடியாகவும், இலவசமாகவும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது நோய்த் தடுப்புக்கு மிக அவசியமாகும்.

8. நோயாளிகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோருக்கும் மனநலன் காக்க ஆற்றுப்படுத்துதல் சேவையைத் திட்டமிட்டு ஆன்லைன் ஏற்பாட்டின் மூலம் வழங்க வேண்டும்.

9. செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மத்திய அரசின் பொதுத்துறை தடுப்பூசி பூங்காவில் மருந்துகள் தயாரித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மத்திய - மாநில அரசுகள் இதற்கு அவசியமான ரூபாய் 250 கோடியை ஒதுக்கீடு செய்து உடனே பணிகளை தொடங்கிட வேண்டும்.

10. 'டெஸ்ட் கிட்'களை தமிழகத்திலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிபிஇ என்ற முழு உடல் பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் முதலியவற்றுக்கு விலைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். விலை குறைவதற்கு ஏதுவாக ஜிஎஸ்டி வரியை 0% ஆக இருக்க வேண்டும்.

விரைவான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், உரிய காலத்தில் சிகிச்சை, விழிப்புணர்வு பிரச்சாரம், மனநல ஆலோசனைகள், பொருளாதார உதவிகள் என அனைத்தும் உள்ளடக்கிய மேற்சொன்ன நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT