புதுச்சேரியில் புதிதாக மேலும் 12 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 83 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரியில் ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 145 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் புதுச்சேரியில் 82 பேரும், மாஹே பிராந்தியத்தில் 2 பேரும் என மொத்தம் 84 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக மேலும் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த முத்தியால்பேட்டையைச் சேர்ந்த முதியவர் இன்று (ஜூன் 11) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் மேலும் 12 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒருவர் ஜிப்மரிலும், 2 பேர் மாஹே பிராந்தியத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பாதிக்கப்பட்டுள்ள 10 பேர் தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர், கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், சோழன் வீதி, பிப்டிக் ரோடு ஆகிய பகுதிகளைச் சேந்தவர்கள் ஆவர். இவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
மாஹேவில் புதிதாக பாதிக்கப்பட்ட 2 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். முத்தியால்பேட்டையை சேர்ந்த 83 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உயர் ரத்த அழுத்த நோய், இருதய நோய் மற்றும் மூளையில் நரம்பு பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சந்தேகத்தின் பேரில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் கடந்த 9 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். கரோனாவால் உயிரிழந்த புதுச்சேரியின் முதல் நபர் இவர் ஆவார். கரோனா விதிமுறைகளின் படி முதியவரை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரியைத் தற்காலிக முகவரியாகக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார். அவரையும் புதுச்சேரி பட்டியலில் சேர்த்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோர் வார்டில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் 47 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அனைவருக்கும் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. அதேநேரத்தில், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 5 பேர், ஜிப்மரில் 2 பேர் என 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை மொத்தம் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 40 பேர், ஜிப்மரில் 42 பேர், மாஹே பிராந்தியத்தில் 4 பேர், வெளி மாநிலத்தில் 2 பேர் என மொத்தம் 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லா மாநிலங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல மாநிலங்கள் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
தமிழகத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று பார்த்துவிட்டு, புதுச்சேரியில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் தினமும் 10, 12 பேர் பாதிக்கப்படுவது தொடர்ந்தால் ஜூலையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.
சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறுகையில், "சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ள வயது முதிர்ந்தவர்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். வேறு பிரச்சினைகள் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு என்பது இதுவரை இல்லை.
தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில், மீண்டும் புதுச்சேரி முழுவதும் தளர்வுகள் நீக்கப்பட்டு, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.