காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்த கர்நாடகாவின் கோரிக் கைக்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக் கப்பட்டது. அதன்பிறகு சிலமுறை கூடிய ஆணையம், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே 8 மாதங்களாக கூட்டம் நடத்தப்படாத நிலை யில், கடந்த பிப்ரவரி 25-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் திறப்பு, பங்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
காணொலியில் ஆணைய கூட்டம்
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடத்தப்பட்டது. ஆணையத்தின் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின், உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் டெல்லியில் இருந்தபடியே பங்கேற்றனர். தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறைச் செயலர் கே.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே பங்கேற்றனர். இதேபோல கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் சார்பிலும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீர்ப் பங்கீடு, நீர் திறப்பு
கூட்டம் தொடங்கிய நிலையில், பொதுவான நீர்ப் பங்கீடு, நீர் திறப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடகா தற்போது வழங்க வேண்டிய நீர் அளவு குறித்து தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனுமதி கோரிய கர்நாடகா
அதைத் தொடர்ந்து, கர்நாடகா சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், மேகேதாட்டுவில் அம்மாநில அரசு கட்ட முயற்சித்துவரும் அணை மற்றும் நீர்மின் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவின் கோரிக்கையை விவாதத்துக்கு எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் தமிழகம் சார்பில் பங்கேற்றோர் சுட்டிக்காட்டினர்.
விவாதத்துக்கு எடுக்கவில்லை
மேகேதாட்டு விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாத ஆணையத்தின் தலை வர், பின்னர் கூட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.