மதுரைக்கு சென்னை மற்றும் வடமாநிலங்களில் இருந்து நேரடியாக இ-பாஸ் மூலமும், மறைமுகமாகவும் ஏராளமானோர் வந்துள்ளதால் கரோனா பரவலை தடுக்க 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாமிற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
வீடு, வீடாக ஆய்வு செய்து, காய்ச்சல் உள்ளோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வரை 34,914 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 24,545 பேரும், மதுரையில் 333 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு இ-பாஸ் பெற்று இரு சக்கர வாகனத்தில் 8 ஆயிரம் பேர் வந்துள்ளனர். ரயிலில் 5 ஆயிரம் பேர் வந்துள்ளனர். விமானத்தில் 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இதுதவிர மறைமுகமாகவும் ஏராளமானோர் மதுரைக்கு வந்துள்ளனர். அவர்களை முழுமையாக இன்னும் பரிசோதனை செய்யவில்லை.
அதனால், அவர்கள் சமூகத்தில் புகுந்துவிட்டதால் மதுரையில் சென்னை போல் ‘கரோனா’ பரவல் தீவிரமாக வாய்ப்புள்ளது. அதனால், மதுரை மாநகராட்சி கரோனா பரவலை தடுக்க 100 வார்டு பகுதிகளில் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடக்கிறது.
இந்த முகாம்களில் பணியாற்றும் சுகாதாரத்துறையினர், வீடு,வீடாக காய்ச்சல், சளி உள்ளவர்களை கண்காணித்து அவர்களை மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து ‘கரோனா’ பரிசோதனை செய்யவுள்ளனர்.
மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கூறுகையில், "மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 142 வரையறுக்கப்பட்ட குடிசைப் பகுதிகள், 189 வரையறுக்க படாத குடிசைப் பகுதிகள் என சுமார் 1.50 லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், சூரணப் பொடி வழங்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று முதல் தொடங்கி நடக்கிறது.
இம்முகாமில் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடிகள், ஹோமியோபதி மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களை கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வழங்கப்படும் மாத்திரைகளை முறையாக உட்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், சளி உள்ளோரை கண்காணித்து ‘கரோனா’ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.