தமிழகம்

கரோனா பணியுடன் எழில்மிகு நகரங்கள் திட்டங்களும் நடக்கட்டும்: அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தல்

கா.சு.வேலாயுதன்

கரோனா தடுப்புப் பணிகளுடன் எழில்மிகு நகரங்கள் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்துமாறு அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (ஜூன் 10) கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாநகரக் காவல் ஆணையாளர் சுமித்சரண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, “கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கோவை மாவட்டத்திற்குள் வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து பலர் வருகை தருகின்றனர். சாலை மார்க்கமாகவும், விமானம் வாயிலாகவும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகை தருபவர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் ஆகியவை கட்டாயம் ஆகும்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட அனைவரையும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் தினசரி கண்காணித்திட வேண்டும். கரோனா தொற்று கண்டறியப்படும் நபர்களின் குடியிருப்புப் பகுதிகளில் பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்தி வீடுகள்தோறும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 23,486 நபர்களுக்கு நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான சிகிச்சையினால் 148 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது 16 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்வதோடு, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளிலும் அனைத்துத் துறை அலுவலர்களும் கவனம் செலுத்த வேண்டும். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு காலங்களில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த எழில்மிகு நகரங்கள் திட்டங்களை விரைந்து முடிக்க அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்” என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT