கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் குடும்பத்தினர் 40 பேருக்குள் மட்டுமே பங்கேற்கும் திருமணங்கள் சமூக இடைவெளியுடன் நடந்து வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி திரளானோர் திருமணத்தில் பங்கேற்பதாக இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து நாகர்கோ£ல் கோட்டாட்சியர் மயில் தலைமையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ், மற்றும் அலுவலர்கள் திருமண மண்டபத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு சமூக இடைவெளியின்றி 300க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஊரடங்கை மீறி அதிகமானோர் கூடியதாக திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் திருமணம், மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் மயில் எச்சரிக்கை விடுத்தார்.