நரபலி வழக்கு தொடர்பாக மேலூர் அருகே மயானத்தை நேற்று மீண்டும் தோண்டியதில் மேலும் 2 சடலங்களின் எலும்புகள் சிக்கின. இன்றும் தோண்டும் பணி நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதி யில் உள்ள கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்ததாக கீழவளவை சேர்ந்த சேவற்கொடியோன் கொடுத்த புகாரின்பேரில் கீழ வளவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
கிரானைட் மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் சட்ட ஆணையர் சகாயம் உத்தரவுப் படி கடந்த 13-ம் தேதி மேலூர் அருகே இ.மலம்பட்டியில் உள்ள மயானத்தில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அப்போது 4 சடலங்களின் எலும்புகள், மண்டை ஓடுடன் கிடைத்தன. இவை தடய வியல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
இதுதொடர்பாக மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் விஜயேந்திர பிதாரி தலைமை யில் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ள பிஆர்பி கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச் சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவம் ஆகியோரி டம் தனிப்படை போலீஸார் 10 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே கைப்பற்றப் பட்ட 4 பேருடைய எலும்புகளுக்கு உரிமை கோரி கிராமத்தினர் சிலர் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை ஆட்சி யர், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ஆகியோருக்கு சகாயம் அனுப்பிய கடிதத்தில், புகார் அளித்த சேவற்கொடியோன் நரபலி தரப்பட்ட 2 பேரின் சடலங்களை இயந்திரம் மூலம் 10 அடிக்கும் கீழே தோண்டி புதைத்ததாக தெரிவித்துள்ளார். நரபலி புகார் தொடர்பான ஆதாரங்களை பெற 10 அடி வரை தோண்டுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சடலங்களை தோண்டும் பணி நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது.பிற்பகல் 2.30 மணியளவில் ஒரு சடலத்தின் எலும்பு மண்டை ஓடுடன் கிடைத்தது. மாலை 4 மணி யளவில் மேலும் ஒரு சடலத்தின் எலும்பு சிக்கியது. ஆறு அடி வரை தோண்டப்பட்ட நிலையில் மாலை 5 மணிக்கு சடலங்களை தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தோண்டும்பணி தொடரும் என வருவாய்த் துறை யினர் மற்றும் போலீஸார் தெரி வித்துள்ளனர்.
சாதாரணமாக இறப்பவர்களை புதைக்க 6 அடி வரை குழி தோண்டு வது வழக்கம். நரபலி கொடுக் கப்பட்டதாக கூறப்படுவர்களை மண் அள்ளும் இயந்திரம் மூலம் 10 அடி ஆழம் வரை தோண்டி புதைக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இன்று 10 அடிவரை தோண்டும்போது சடலங்கள் சிக்கினால் இவ்வழக்கில் கூடுதல் பரபரப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
சடலங்களை தோண்டும் பணி நேற்று தொடங்கியதும் சகாயம் அங்கு வந்தார். அவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது, ‘ஏற் கெனவே 5 அடி தோண்டியிருந் தனர். மேலும் ஆழமாக தோண்டி ஆதாரங்களை தேடி எடுக்கும் பணி நடக்கிறது. இதை போலீஸ், வருவாய்த் துறையினர் சரியாக செய்வார்கள் என நம்புகிறேன். சட்ட ஆணையம் இதை கண் காணித்து வருகிறது. கிரானைட் முறைகேடு விசாரணை அறிக்கை அக்டோபர் 15-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றார்.