தமிழகம்

ஊக்க மருந்து குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு: தடகள வீராங்கனை கோமதி திட்டவட்டம்

கரு.முத்து

சர்வதேசத் தடகள நேர்மைக் குழு தனக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் போட்டியில், திருச்சி முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். தமிழகமே வியந்து பாராட்டிய கோமதியின் மகிழ்ச்சி நிலைக்க, விளையாட்டு உலகம் விடவில்லை.

அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 'நாண்ட்ரோலன்' என்னும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர் நடைபெற்ற அடுத்தகட்ட சோதனையும் அவர் ஊக்க மருந்து உபயோகப்படுத்தியதாக உறுதி செய்தது.

இந்த விவகாரம் சர்வதேச தடகள நேர்மைக் குழுவின் விசாரணைக்குச் சென்றது. அங்கு நடைபெற்ற விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், போட்டிகளில் பங்கேற்க கோமதிக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2019-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி முதல் மே மாதம் 17-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அவர் பெற்ற அனைத்து வெற்றிகளையும் சாதனைப் பட்டியலில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று உறுதியுடன் இருக்கிறார் கோமதி. காலை முதல் மாலை வரை திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். உறுதியுடன் இருந்தாலும் தீர்ப்பு அவரைச் சற்று பாதித்திருக்கிறது.

கோமதியிடம் இதுகுறித்துப் பேசினேன்.

“நான் ஒருபோதும் ஊக்கமருந்து பயன்படுத்தியது கிடையாது. ஆசியத் தடகளத்தில் தகுதிச் சுற்றாக நடத்தப்பட்ட ஃபெடரேஷன் கோப்பை போட்டியின்போது நான் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை கூறியிருக்கிறது. இந்தத் தகவலை அவர்கள் என்னிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நான் இத்தகைய தர்ம சங்கடங்களைச் சந்திக்க வேண்டியது இருக்காது.

நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்ட எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ஜூன் 11-ம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளேன். அதில் நான் நிரபராதி என்பது உலகுக்குத் தெரிய வரும். மீண்டும் முழு வேகத்தில் போட்டிகளில் பங்கேற்று தாய்நாட்டுக்குப் பெருமை தேடித் தருவேன்” என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார் கோமதி.

எந்தப் பின்புலமும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பசி பட்டினியுடன், கடுமையான பயிற்சிகளின் மூலம் தடகளத்தில் தங்கம் வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த கோமதி, தன் மீதான இந்தக் குற்றச்சாட்டைக் களைந்து பழைய கோமதியாகத் திரும்பி வரட்டும்.

SCROLL FOR NEXT