டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை மறு நாள் தமிழக முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்பி தீபா கணிகர் ஆய்வு செய்தார். உடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்டோர். 
தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு- தமிழக முதல்வர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொள்கிறார்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அணை கட்டப்பட்டு இதுவரை 86 ஆண்டுகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி, இதுவரை 15 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனினும், அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததன் காரணமாக, உரிய காலத்துக்கு முன்னர் 11 முறை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு அணையில் தற்போது, 101.70 அடி நீர் மட்டம் உள்ளது. எனவே நடப்பாண்டு டெல்டா பாசனத்துக்காக நாளை மறுதினம் (12-ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து, நாளை மறுதினம் டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து விடுகிறார். இதையொட்டி, அணை வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட எஸ்பி தீபா கணிகர் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், அணை செயற்பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவி பொறியாளர் மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT