தமிழகம்

கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை: எழுத்தாளர் ஜெயமோகன் அறிவிப்பு

கே.கே.மகேஷ்

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய இணையதளப் பக்கத்தில், ‘ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்’ என்ற தலைப்பில் முகவரியில்லாத அநாமதேயக் கடிதத்தைப் பிரசுரித்து அதற்குப் பதிலும் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் இடதுசாரி இயக்கங்கள் மீதும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீதும் காழ்ப்பைக் கொட்டியிருப்பதாக சர்ச்சை கிளம்பியது.

பெயர் குறிப்பிடாமல் அவதூறு கடிதத்தைப் பிரசுரித்திருப்பதற்கு ஜெயமோகனே பொறுப்பு என்றும், இந்தக் காரியத்தை அவர் எப்போதும் செய்து வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கையெழுத்திட்டு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டார்கள். பா.செயப்பிரகாசமும் ஜெயமோகனைக் கண்டித்து எழுதியிருந்தார்.

இந்த நிலையில் அதற்குப் பதிலடியாக ஜெயமோகன் இன்று தனது இணையப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது;
''இணையத்தில் செயப்பிரகாசம் என் மேல் அவதூறும் வசையும் பொழிந்து எழுதியிருக்கும் பக்கங்களை நகல் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆதரவாக ஒரு கண்டன அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அச்சு ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியான, கீழ்த்தரமான அவதூறு என்பது அந்தக் கண்டன அறிக்கையில் உள்ள என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள்தான். ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்னவேண்டுமென்றாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்பமுடியும் என்பதுதான் அவதூறு நடவடிக்கை.

என் வழக்கறிஞர் நண்பர்கள் ஈரோட்டில் கூடிப் பேசியதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. செயப்பிரகாசம் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும். அந்தக் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் முக்கியமான அனைவர் மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும். குறிப்பாக, அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது அவதூறு வழக்கும் துறைரீதியான புகார்களும் அளிக்கப்படும். அவர்கள் செயப்பிரகாசம் வழக்கிலும் சாட்சியாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் மொழியைக் கொண்டே வழக்கை நடத்துவோம்''.

இவ்வாறு ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

ஜெயமோகனின் இந்த அறிவிப்பு எழுத்தாளர்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படைப்பாளிகள் தங்களுக்கிடையேயான கருத்து மோதலில் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் இழுப்பது நியாயமா? என்றும், இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் கருத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

SCROLL FOR NEXT